முதுமலையில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்ட ஜனாதிபதி முதுமலை வருகிறார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகள் மற்றும் பாகங்களுக்கு இடையேயான பாசப்பிணைப்பை பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருதை பெற்றது. இதில் பாகன் தம்பதிகளாக நடித்த பொம்மன் மற்றும் பெள்ளியை பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது. இந்த தம்பதிகளை நேரில் சந்தித்து பாராட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை காலை 11:30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருக்கு வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடியில் 3:30 மணிக்கு ஹெலிபேட் தளத்திற்கு வருகிறார். பின் 3.45 மணிக்கு 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கார் மூலம் பாதுகாப்பு அணிவகுப்பில் செல்கிறார். அங்கு பாகன் தம்பதிகளுக்கு பாராட்டு தெரிவித்து பின்னர் வளர்ப்பு யானைகள் உணவு மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று யானைகளுக்கு உணவுகள் வழங்க உள்ளார். மேலும் பழங்குடியின மாதிரி கிராமத்தை பார்வையிடுகிறார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடிந்த பின்பு சென்னை செல்கிறார்
ஜனாதிபதி வருகையை ஒட்டி 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 18 ஏ.டி.எஸ்.பிக்கள், 36 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் அது அடர்ந்த வனப்பகுதி என்பதால் நக்சல் தடுப்பு பிரிவுகள், அதிரடிப்படை பிரிவினர் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் முதன்மை வன உயிரின காப்பாளர், கலெக்டர், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டுள்ளனர்.