டெல்லிக்கு சென்று இருந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று இரவு பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்பால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. பின்னர் தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகளால் சென்னை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் மத்திய குழுவும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு வந்து சேதங்களை ஆய்வு செய்தது. இதனை அடுத்து டெல்லிக்கு சென்று இருந்த முதலமைச்சர்
மு.க ஸ்டாலின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அதை தொடர்ந்து நேற்று இரவு பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் நிவாரண பணிகள் மேற்கொண்டது குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். மேலும் மழை வெள்ளம் நிவாரண பணிகளுக்காக தற்காலிக நிதியாக ரூபாய் 7033 கோடி, நிரந்தர நிவாரணத் தொகையாக ரூபாய் 12,659 கோடியும் விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கியுள்ளார். இதன் காரணமாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடியை அவசர நிவாரண நிதியாகவும், வாழ்வாதார உதவிக்காகவும் விரைந்து வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.