பிரதமர் நரேந்திர மோடி வருகிற 4-ம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகை புரிய உள்ளார்.
தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகை தருகிறார். இதுவரை இரண்டு மாதத்தில் மூன்று முறை தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் கடந்த மாதம் இறுதியில் திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி மற்றும் மதுரை தூத்துக்குடி ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் மீண்டும் பிரதமர் மோடி வருகிற திங்கட்கிழமை நான்காம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். அதற்கு முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். அதன் பின்பு கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சென்று அங்கு 400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நந்தனம் ஒய். எம். சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.