தமிழக கவர்னரிடம் அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் பணியில் நடைபெற்ற முறைகேடு பற்றி விளக்கம் சமர்ப்பித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகளில் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் சேர்ந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது. இதனை விசாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதற்கிடையில் தமிழக கவர்னர் இந்த சம்பவம் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். அதன்படி இதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் மூன்று பேர் கொண்ட குழுவிடம் வழங்கி இருக்கிறது. இதனை அடுத்து இந்த குழு முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை அழைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.