கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து சில பகுதிகளில் வெள்ளமாக தங்கி உள்ளது. மேலும் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குழித்துறை, தாமிரபரணி ஆறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டி வருகிறது. இதனால் இரண்டாவது நாளாக அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர். மேலும் மழை மூன்று நாட்கள் நீடிக்கும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்