தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 5 பேருக்கு பணியிட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. நிர்வாக நலன் கருதி இந்த பணியிட மாற்றங்கள் அறிவிக்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளி கல்வி இயக்ககத்தின் இயக்குனராக க. அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் ஆக வி சி ராமேஸ்வரமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக ச கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக மு பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலாளராக பெ. குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் இந்த மாறுதல்கள் அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில், அதிகாரப் பொறுப்பில் ‘பள்ளிக் கல்வி ஆணையர்’ அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்கு, பல்வேறு தரப்புகளிலும் எதிர்ப்பு வந்த நிலையில், மீண்டும் ‘பள்ளிக் கல்வி இயக்குனர்’ பதவி கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.