இலவச பயணத்திட்ட பேருந்துகளில் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பெண்களை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமபுற பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு இலவச பயணத்திட்ட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இத்திட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பணி செய்யும் போக்குவரத்து தொழிலாளர்கள் பயணிகளிடம் கனிவுடன் நடக்கவும், பெண்களை ஏற்றிச்செல்வதில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை பொருட்காட்சி திடல் பேருந்து நிலையத்தில் இருந்து மேலச்செவல், முன்னீர்பள்ளம், கொங்கந்தான்பாறை, மானூர், அடைமதிப்பான்குளம், செங்குளம் உள்ளிட்ட கிராம புறங்களுக்கு இயக்கப்படும் மகளிர் இலவச பயணத்திட்ட பேருந்துகளில் சில நிறுத்தங்களில் பெண்கள் நின்றாலும் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து பெண்கள் சிலர் கூறுகையில், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சில போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இலவச பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாகவும், இலவச பேருந்துகளில் பெண்களிடம் தொழிலாளர்கள் சிலர் கடிந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.