சென்னை மாநகராட்சி பகுதியில் ரூ.1,300 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வீடுகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து ஆண்டு தோறும் 2 முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு சுமார் ரூ.500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது. சென்னையில் 13 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு ஒரு மாதம் உள்ள நிலையில் சொத்து வரி வசூலை வருவாய் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதுவரையில் 7 லட்சம் உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்தி உள்ளனர். சொத்து வரி இலக்கு ரூ.1,500 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரையில் ரூ.1,300 கோடி வசூலாகி உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நாளை 1-ந்தேதி முதல் சொத்து வரி வசூல் மேலும் தீவிரப்படுத்தப்படும். சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த ஒரு மாதத்திற்கு இலக்கை அடைய தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.














