2017 பிப்ரவரி 15ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட்டின் மேல் நிலை, 8 ஆண்டுகள் கழித்து அக்டோபர் 6ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து அட்லாண்டிக் பெருங்கடலில் பாதுகாப்பாக விழுந்தது. கார்டோசாட்-2டி உட்பட 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம், பிஎஸ்எல்வி-சி37 மிகப்பெரிய சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சர்வதேச அளவில் விதிக்கப்பட்ட விண்வெளி குப்பைகளை குறைக்கும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பிஎஸ்எல்வி-சி37 இன் மேல் நிலையின் சுற்றுப்பாதை சிதைவை கவனமாக கண்காணித்து வந்தது. பரிந்துரைக்கப்பட்ட 25 ஆண்டுகளுக்குள் இந்த மேல் நிலை பூமியில் மீண்டும் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ, எதிர்காலத்தில் ராக்கெட் மேல் நிலைகளின் சுற்றுப்பாதை வாழ்நாளைக் குறைத்து, 2030ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட மறு நுழைவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி குப்பைகள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கும் இஸ்ரோவின் இலக்கு நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.