புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணி சலுகை வழங்கப்படுகிறது.
புதுவை அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் காலை நேரத்தில் 2 மணி நேர பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பணிச்சலுகை அறிவிப்பை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசையும் கூட்டாக வெளியிட்டனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அரசாணையில் வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்படும். மாதத்தின் 3 வெள்ளிக்கிழமைகள் இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்த சலுகை பெறக்கூடாது. இந்த நேர சலுகை இன்று முதல் அமலுக்கு வருகிறது.