பஞ்சாபில் இன்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி அமைச்சர் ஹர்பல் சிங் சீமா, 1.96 லட்சம் கோடி மதிப்பில், இன்று பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டார். பட்ஜெட் நிதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26% கூடுதல் ஆகும். மேலும், ஆம் ஆத்மி கட்சியால் முழுமையாக நிறைவேற்றப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட்டில், விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேளாண் துறைக்கு 13888 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 20% கூடுதல் ஆகும். மேலும், அரசாங்கத்தின் புதிய வேளாண் கொள்கை விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு 74620 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பட்ஜெட்டை விட 12% கூடுதலாகும். பட்ஜெட் விரிவுரையின் போது, ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு சுகாதாரத்துறை சார்ந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுத்துக் கூறப்பட்டன.














