உக்ரைன்- ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்ய படைகளை அணி திரட்ட உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை அன்று, இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர், "ரஷ்யாவின் இறையாண்மையைப் பாதுகாக்க, துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. போரை நிறுத்தவும், அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டை தடுக்கின்றன. எனவே, தற்போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. ரஷ்யாவில் உடனடியாக ராணுவப் படைகளைத் திரட்ட நான் உத்தரவிடுகிறேன்" என்று கூறினார்.
மேலும், ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் அழித்துவிடும் நோக்கில் மேற்கத்திய நாடுகள் சதி செய்து வருவதாக அதிபர் புதின் கூறியுள்ளார். அத்துடன், மக்கள் அனைவரையும் ராணுவத்தில் சேர, தான் அறிவுறுத்தவில்லை என்றும், ஏற்கனவே, ராணுவப் பயிற்சி பெற்றோரை மட்டுமே படையில் சேர அறிவுறுத்துவதாகவும் திட்டவட்டமாகக் கூறினார். ராணுவப் பயிற்சி பெற்று, தற்போது வேறு வேலைகளில் ஈடுபடும் உடல் தகுதி உள்ளவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து, போர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உக்ரைன் நாட்டின் டவுன்பாஸ் பகுதியில் நடைபெற்று வரும் போரில் அணு ஆயுதப் பயன்பாடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் அறிவித்தார். அத்துடன், கடந்த 1991 ஆம் ஆண்டு, சோவியத் யூனியனைப் பிளவு படுத்தி வெற்றி கண்ட மேற்கத்திய நாடுகள், இந்த முறை ரஷ்யாவை சிறு பகுதிகளாகப் பிளவுபடுத்த திட்டம் தீட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அதே வேளையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் நாட்டின் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்த வாக்கெடுப்பை புறக்கணிப்பு செய்யுமாறு ஆதரவு படைகளுக்கு கூறியுள்ளார். மேலும், ஐநா சபையின் அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன் ஷீல்டு, “உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்து, அந்த நாட்டின் இறையாண்மையை கெடுக்கும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டால் அதனை அமெரிக்கா ஏற்காது” என்று தெரிவித்துள்ளார். எனவே, ரஷ்யாவின் படை திரட்டும் அறிவிப்பு போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று கருதப்படுகிறது.