வரும் ஆகஸ்ட் 22 முதல் 24ம் தேதி வரை, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக, விளாடிமிர் புதின் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, பிரிக்ஸ் மாநாட்டின் போது அவர் கைது செய்யப்படலாம் இன்று கருதப்படுவதால், இந்த மாநாட்டில் பங்கேற்பதை அவர் தவிர்ப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே வேளையில், அவருக்கு பதிலாக, ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை, விளாடிமிர் புதின் அங்கு வருகை தந்தால், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டி வரும். இது தென்னாப்பிரிக்காவுக்கு மிகுந்த பாதிப்பை தரும். இது தொடர்பாக, அந்நாட்டு அதிபர், புதினை கைது செய்யும் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டி சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். அந்த வகையில், புதின் பங்கேற்காத செய்தி தென்னாப்பிரிக்காவில் வரவேற்கப்பட்டுள்ளது.