மருந்துகளின் தரம் மற்றும் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையிலும், போலி மருந்துகளின் விற்பனையை தடுக்கும் வகையிலும், மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. டிராக் அண்ட் டிரேஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் திட்டத்தின் படி, ஒவ்வொரு மருந்து பொருளின் பாக்கெட்டுகளிலும், க்யூ ஆர் கோடு அல்லது பார் கோடு ஆகியவற்றை கட்டாயமாக அச்சிட வேண்டும். இதனால், கடையிலிருந்து பொதுமக்கள் வாங்கும் மருந்துகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, நாட்டில் அதிகமாக விற்பனை செய்யப்படும் 300 மருந்து பொருட்களின் பாக்கெட்டுகளில் க்யூ ஆர் கோடு அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நோய் எதிர்ப்பாற்றல் மருந்துகள், இதய நோய்க்கான மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், தொற்றுக்கு எதிரான மருந்துகள் போன்றவற்றிலும், 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மாத்திரை அட்டையிலும் க்யூ ஆர் கோடு அச்சிடப்பட உள்ளது.
ஏழை மற்றும் வளரும் நாடுகளில் விற்கப்படும் 10% மருந்துகள் போலியானவை என்று உலகச் சுகாதார மையம் அறிவித்திருந்தது. அதன்படி, போலி மருந்துகள் புழக்கத்தை களைய, இந்திய அரசால் டிராக் அண்ட் டிரேஸ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், க்யூ ஆர் கோடு அச்சிடும் செயல்முறையால், 3 - 4% உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.