ரபா நகரில் இருந்து இதுவரை சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா நகரில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகியுள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களை இடம்பெயர சொல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ராணுவ நடவடிக்கைகள் மே 6-லிருந்து தீவிரமடைய தொடங்கியன. அப்போதிலிருந்து சுமார் 80,000க்கும் அதிகமான மக்கள் வேறு புகலிடம் தேடி இடம் பெயர்ந்து உள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இடம்பெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும், இவர்களுக்கு வேறு பாதுகாப்பான இடம் இல்லை என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.
காசவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. அமெரிக்கா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பிரதமர் நேதன்யாகு தனித்து நின்று போரிடுவோம் என்று கூறியுள்ளார்.














