அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது ‘மோடி’ என்று பெயர் உள்ளவர்கள் குறித்து அவர் விமர்சித்தார். இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார்.
ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது. இதையடுத்து 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.