கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடை பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஒன்றிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் வகையில் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தின் குமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் 104 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதிய கடிதத்தில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும். கோவிட் நடைமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் தேசநலனை கருதி நடை பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.