பயணிகள் ரயில்வே பிரிவின் வருவாய் 92 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த வருடம், 17394 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய ரயில்வே துறை, இந்த வருடம் 33476 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. குறிப்பாக, முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் கட்டண வருவாய் 65% உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் கட்டண பிரிவில் 500% வருவாய் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 42.89 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 34.56 கோடியாக இருந்தது. எனவே, முன்பதிவு செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கையில் 24 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதனால், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் 65 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த வருடத்தில், 16307 கோடி ரூபாயாக இருந்த முன்பதிவு பயணிகள் கட்டண வருவாய், இந்த வருடம் 26961 கோடியாக உயர்ந்துள்ளது.
அதே வேளையில், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம், 90.57 கோடி பேர் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்த நிலையில், இந்த வருடம் 268.56 பேர் இவ்வாறு பயணம் செய்துள்ளனர். இது 197% வளர்ச்சியாகும். இதனால், கடந்த வருடத்தில் 1086 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், இந்த வருடம் 6515 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 500 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.