ராஜஸ்தான் மாநிலத்தில் அன்னபூர்ணா மளிகை பொருள் தொகுப்பு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த திட்டத்தை மாநில முதல்வர் அசோக் கெலாட் நேற்று தொடங்கி வைத்தார்.
அன்னபூர்ணா மளிகை பொருள் தொகுப்பில், உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், சமையல் எண்ணெய், துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தொகுப்பு ஒன்று 370 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனை இலவசமாக வழங்குவதன் மூலம், மாநில அரசுக்கு ஒவ்வொரு மாதமும் 392 கோடி செலவாகிறது. எனினும், விலைவாசியை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் பிரதாப் சிங் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் ஆகியோர், திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.














