மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மல்லிகார்ஜூன கார்கே ராஜினாமா செய்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காங்கிரஸ் தலைவர் தேர்தலில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சசி தரூர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சோனியா காந்தி குடும்பத்தின் விசுவாசியான ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், ராஜஸ்தான் மாநில அரசியலில் நெருக்கடி ஏற்பட்டதால், கட்சித் தலைவர் போட்டியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, இவருக்கு பதிலாக மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையின்படி, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மல்லிகார்ஜூன கார்கே ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பி உள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் மல்லிகார்ஜூன கார்கே - சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.