வங்க கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்ககடலில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடல் பகுதிகளில் வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை அடுத்து மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வரம்,தனுஷ்கோடி, மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை