இந்தியாவின் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா. புதுமை மற்றும் மலிவு விலை என்ற இரண்டு அம்சங்களையும் ஒன்றிணைத்து, இந்திய மக்களின் கனவை நனவாக்கினார். 1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டாடா இண்டிகா கார், இந்தியாவின் முதல் உள்நாட்டு கார் என்ற பெருமை பெற்றது. இது நாட்டின் வாகனத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.
2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நானோ கார், உலகின் மிகக் குறைந்த விலை கார் என்ற பெயரைப் பெற்றது. இது நடுத்தர வர்க்க மக்களின் கார் கனவை நனவாக்கியது. வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், புதுமையின் அடையாளமாக இது தொடர்ந்து இருக்கும். மேலும், 2008-ம் ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்தியது, டாடா குழுமத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னோடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.