மத்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 2.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோசமான கடன் வழங்கலை தவிர்க்க தவறியது, தனது லாபத்தில் குறைந்த பட்ச தொகையை இருப்புக்கு பரிமாற்றம் செய்யாமல் இருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் வங்கி மீது வைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 2021 முதல், வங்கியை தொடர்ந்து கண்காணித்ததில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
“கடந்த 2021 ஆம் நிதி ஆண்டில், வங்கியின் லாபத்தில் 25% பணத்தை இருப்புக்கு பரிமாற்றம் செய்யவில்லை என நிரூபணம் ஆகி உள்ளது. மேலும், மோசமான செயல்பாடுகளை, வங்கி தவிர்க்க தவறியுள்ளது. இது தொடர்பாக, வங்கிக்கு ஏற்கனவே 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு வங்கி அளித்த பதில்களை ஆராய்ந்து, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.