அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் அமேசான் பே நிறுவனத்திற்கு, சுமார் 3.06 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் நிதி சேவைகள் உள்ளிட்டவற்றில் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, மத்திய ரிசர்வ் வங்கி இந்த அபராதத்தை விதித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ப்ரீபெய்ட் பரிவர்த்தனை சார்ந்த விதிமுறைகளை மீறி அமேசான் பே செயல்பட்டதாகவும், கேஒய்சி தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக, ஏற்கனவே அமேசான் பே நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் கேள்விகளுக்கு அமேசான் பே நிறுவனம் அளித்த பதில்களை ஆய்வு செய்த பின்னரே, இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், அபராதம் விதிக்கப்பட்டதற்கு விதிமுறை மீறல் ஒன்றே காரணம் எனவும், அமேசான் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும், ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.














