'ஆரஞ்ச்' நிற பால் பாக்கெட் அட்டை விற்பனையை குறைக்க அதிகாரிகளுக்கு ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு ஆரஞ்ச், பச்சை, நீலம் நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி 500 மி.லி. ஆரஞ்ச் பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும், நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
பால் விலை குறைப்பால் ஆவின் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தனியார் பால் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளதால், ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகள் கூடுதல் கொள்முதல் விலையை எதிர்பார்க்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இது 500 மி.லி. 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பின் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் தயாரிப்பு 80 சதவீதம் அளவிற்கு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரஞ்ச் நிற பால் அட்டை விற்பனையை தவிர்த்து சிவப்பு நிற பால் அட்டையை அதிகளவில் பொது மக்களுக்கு வினியோகம் செய்ய ஆவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி முதல் இதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.