சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுக்கு பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக மருத்துவத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் பன்னாட்டு மருத்துவ மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட மருத்துவத்துறையினர் கலந்து கொண்டனர். இதில் 6000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களாவர். இவர்களுக்கான பதிவு கட்டணம் 1000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 2192 மாணவர்கள் மருத்துவம் மற்றும் பிற படிப்புகளில் 7.5% அரசு பள்ளி ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் பெற்ற மாணவர்கள் ஆவர். தற்போது அவர்களுக்கு பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு மற்றும் உறைவிட வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














