பிரதமர் மோடி தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான முழு பயண விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் படி பிரதமர் மோடியின் முழு சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி 27ஆம் தேதி கேரள மாநில திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு செல்கிறார். சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார். பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் பாஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார். பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரைக்கு சென்றடைகிறார். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழக பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். அப்போது பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது. பின்னர் அன்று இரவு அதே ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் 28ஆம் தேதி ஹோட்டலில் இருந்து கார் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு செல்கிறார். மதுரை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி சென்றடைகிறார். தூத்துக்குடி துறைமுக வாளாகத்தில் நடைபெற உள்ள விழாவில் பங்கேற்று சில திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாடுகிறார். பின்னர் திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக அடிக்கல் நாட்ட உள்ளார். பின்னர் ராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதன் விழா முடிவடைந்ததும் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை செல்கிறார். நெல்லையிலிருந்து பாஜக கூட்டிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு நெல்லையிலிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக கேரளாவிற்கு செல்கிறார்.