கடந்த அக்டோபர் மாதத்தில் வேகமான 4ஜி இணைய சேவை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ட்ராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜியோவின் சராசரி பதிவிறக்க வேகம் 20.3 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. ஜியோவைத் தொடர்ந்து, அடுத்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் 15 எம்பிபிஎஸ் வேகத்துடனும், வோடபோன் நிறுவனம் 14.5 எம்பிபிஎஸ் வேகத்துடனும் உள்ளன.
பதிவேற்றத்தைப் பொறுத்தவரை ஜியோ 4ஜி இணைய சேவையின் சராசரி வேகம் 6.2 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தை (6.4 எம்பிபிஎஸ்) விட இது குறைவாக இருந்தாலும், மற்ற போட்டி நிறுவனங்களை விட ஜியோ முன்னணியில் உள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு அடுத்த நிலையில், வோடபோன் 4.5 எம்பிபிஎஸ் வேகத்துடனும், ஏர்டெல் 2.7 எம்பிபிஎஸ் வேகத்துடனும் உள்ளன.