சர்வதேச சந்தையில், இந்திய கைவினைப் பொருட்களை விற்க உள்ளதாக ரிலையன்ஸ் ரீடெய்ல் அறிவித்துள்ளது. இதற்காக, பல்வேறு உலக நாடுகளில் ஸ்வதேஷ் என்ற பெயரில் ஆடம்பர விற்பனையகங்களை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் 'ஸ்வதேஷ்' பிராண்டின் கீழ், இந்தியாவின் பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்கப்பட உள்ளன. பாரம்பரியமான உடைகள், நகைகள், மண்பானை வகைகள், வெள்ளி பாத்திரங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் போன்ற பலதரப்பட்ட கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்காக, இந்தியா முழுவதும் உள்ள 10000 க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களுடன் கூட்டணியில் இணைந்துள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ மார்ட் உடன் கைகோர்த்து, இணைய வர்த்தகத்திலும் ஸ்வேதேஷ் விற்பனையகங்கள் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.