ரிலையன்ஸ் வர்த்தக குழுமத்தின் சில்லறை வணிகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் மதிப்பு 8.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் 46 வது வருடாந்திர சந்திப்பில், ரிலையன்ஸ் ரீடைல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் ரீடைல் மதிப்பு 4.28 லட்சம் கோடி அளவில் இருந்ததாகவும், அது தற்போது 8.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் தலைவர் இஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு 100 கோடி பரிவர்த்தனைகளை கடந்துள்ளதாக கூறியுள்ளார். இது வருடாந்திர அடிப்படையில் 42% உயர்வு எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் 30% மக்களுக்கு, ரிலையன்ஸ் ரீடைல் சேவை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், உலகின் தலைசிறந்த 10 சில்லறை வணிக நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். ரிலையன்ஸ் ரீடைல் வணிகப் பிரிவில் அதிகரித்து வரும் முதலீடுகள், அதன் வளர்ச்சியை மேலும் அதிகரிப்பதாக கூறியுள்ளார்.