சென்னையில் 79,305 சதுர மீட்டர் அளவுக்கு 9,035 சாலைப் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சீரமைப்புப் பணிகள் மற்றும் பருவமழை காரணமாக சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மாநகராட்சியின் 200 வார்டுகளில் 2,646 சாலைகளில் 1,07,165 சதுர மீட்டர் பரப்பளவில் 10,553 பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் நேற்று வரை 79,305 சதுர மீட்டர் பரப்பளவில் 9,035 பள்ளங்கள் சீர்செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளங்களை ஜல்லிக் கலவை, தார்க்கலவை, குளிர் தார்க்கலவை மற்றும் கான்க்ரீட் கலவை பயன்படுத்தி சீரமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.