சார்தாம் யாத்திரையில் முன்பதிவு வசதியை உத்தராகண்ட் அரசு அறிமுகம் செய்துள்ளது.
உத்தராகண்டில் முக்கியப் புனித யாத்திரையாக ‘சார்தாம்’ உள்ளது. இதில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 சிவத் தலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நான்கு தலங்களுக்கு தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் புனித யாத்திரை வருகின்றனர். இவர்கள் தரிசனத்திற்காக பலமணி நேரம் கடும் குளிரில் காத்திருக்கும் நிலை ஏற்படுவதுண்டு. இதை தவிர்க்க உத்தராகண்ட் அரசு பல புதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் முக்கியமாக தரிசனத்திற்கு முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இணையதளம் (registration and touristcare.uk.gov.in), வாட்ஸ்-அப்எண் (91-8394833833), இலவச போன் (0135-1364) மற்றும் touristcareuttrakhand எனும் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். இதனால் நான்கு தலங்களின் புனித யாத்திரையில் இனி நீண்டநேரக் காத்திருப்புக்கு அவசியமில்லை. இந்த முன்பதிவு முறை கடந்த பிப்ரவரி 21 முதல் தொடங்கப்பட்டது. அதற்குள் நேற்றுவரை, சுமார் ஒரு கோடி பக்தர்கள் தரிசனங்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.