கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.44% ஆக பதிவாகியுள்ளது. இது ஜனவரி மாதத்தில் பதிவான 6.52% ஐ விட சற்று குறைவாகும். எனினும், இது மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 6% வரம்பை தாண்டியே பதிவாகியுள்ளது. மேலும், 2023 ஆம் வருடத்தின் முதல் இரு மாதங்களிலும் இந்த வரம்பை தாண்டி சில்லறை பணவீக்கம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய முறையில், காலநிலை மாற்றம் காரணமாக, உணவு மற்றும் பானங்கள் துறை சார்ந்த விலை குறியீட்டு எண் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜனவரி மாதத்தில் 6.19% ஆக இருந்த உணவு விலை குறியீட்டு எண், பிப்ரவரி மாதத்தில் 6.26% ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு உணவு தானிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. குறிப்பாக, பருப்பு விலையில் 16.73%, முட்டை விலையில் 4.32%, பால் பொருட்கள் விலைகளில் 9.65% உயர்வு காணப்பட்டுள்ளது.
அதை வேளையில், ஜவுளி, எரிபொருள் சார்ந்த துறைகளில் விலைகள் சற்று குறைந்துள்ளன. ஜவுளித்துறை பணவீக்கம் 8.79% ஆக சரிந்துள்ளது. மேலும், எரிபொருள் துறை சார்ந்த பணவீக்கம் 9.9% ஆக சரிந்துள்ளது. இவை, கடந்த ஜனவரி மாதத்தில், 9.08% மற்றும் 10.84% ஆக முறையே பதிவானது குறிப்பிடத்தக்கது.














