சீனாவின் விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையில் அறுவடை செய்யப்பட்ட உலகின் முதல் நெல் விதைகள் பூமிக்குத் திரும்புயுள்ளன.
சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கின. தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடியை உற்பத்தி செய்யும் பணி தொடங்கியது. இந்த சோதனையானது ஜூலை 29 அன்று ஊட்டச்சத்து ஊசி மூலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதன் வளர்ச்சி, நவம்பர் 25 அன்று மொத்தம் 120 நாட்களுக்குள் முடிந்தது. தாலே கிரெஸ் மற்றும் நெல் விதைகள் முளைத்து, வளர்ந்து, பூக்கள் மற்றும் விதைகளைக் கொடுத்தன. நெல் செடிகள் பெரிய இலைக் களுடன் விண்வெளியில் வளர்ந்துள்ளது. குறுகிய தானிய அரிசி சிறியதாக வளர்ந்தது.
இரண்டு தாவரங்களும் 120 நாட்கள் விண்வெளி சாகுபடியை பூர்த்தி செய்தன. மேலும் விதை முதல் விதை வரை முழு வளர்ச்சி சுழற்சியை நிறைவு செய்தன. முன்பு, தாலே கிரெஸ், பட்டாணி மற்றும் கோதுமை ஆகியவை மட்டுமே விண்வெளி சூழலில் விதையிலிருந்து விதையாக வெற்றிகரமாக வளர்ந்தன. விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருக்கும். இந்த சூழலில், தாவரங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது பற்றி புரிந்து கொள்வதற்காக சீன விஞ்ஞானிகள் வாழ்க்கை அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.