ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்த ரோகித் சர்மா, அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்றபின், அதில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அணியின் தோல்வி காரணமாக, அவரது கேப்டன் பதவி கேள்விக்குள்ளானாலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பின் அதைப்பற்றி பேசப்படாமல் இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடரில் அவர் கேப்டனாக நீடிக்க வாய்ப்பு இல்லை என்ற தகவலுக்கு பிறகு, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 67 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய ரோகித், 4301 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதங்கள், 18 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 40.57 ஆகும். மேலும் 16 இன்னிங்ஸ்களில் பந்துவீச்சிலும் ஈடுபட்டுள்ள அவர் 2 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.














