ஒரு மாத பராமரிப்பு பணிக்குப் பின், பக்தர்களுக்காக ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்.
பழனி முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதும் வழக்கம். பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இன்று முதல் ரோப் கார் சேவை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி மற்றும் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒரு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்கிய ரோப் கார் சேவையை பக்தர்கள் ஆர்வத்துடன் பயன்படுத்தி மகிழ்ச்சி தெரிவித்தனர்.














