இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தில், வரலாற்று உச்சமாக, மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ரீஜினல் ரேப்பிட் ட்ரான்சிட் சிஸ்டம் (ஆர் ஆர் டி எஸ்) என்ற ரயில், காசியாபாத்தில் உள்ள துஹாய் பணிமனையிலிருந்து சகிபாபாத் வரையிலான 17 கிலோமீட்டர் தூரத்திற்கு சோதனை முறையில் இயக்கப்பட்டது. ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளை சோதனை செய்வதற்காக இந்த ஓட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக, இதே வழித்தடத்தில் 5 முதல் 25 கிலோமீட்டர் வேகத்திற்கு ரயில் இயக்கப்பட்டது. தற்போது, 160 கிலோமீட்டர் வேகம் வரை ரயில் இயக்கப்பட்டுள்ளது. மேலும், துஹாய் பணிமனையில் 4 ஆர் ஆர் டி எஸ் ரயில்கள் 180 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, சோதனை ஓட்டத்தில் பயணிகளின் எடைக்கு நிகராக மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு சோதனை நடத்தப்படும். ஆனால், தற்போதைய சோதனை ஓட்டத்தில் மணல் மூட்டைகள் வைக்கப்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது. பல்வேறு சோதனை கட்டங்களை தாண்டி, இந்த ரயில் மார்ச் 2025 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று கருதப்படுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.