புதுச்சேரியில் தியாகிகளுக்கு ரூ.1000 பென்ஷன் உயர்த்தி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், நிதிலை அறிக்கையில் நம்முடைய நிதி ஆதாரம், கடன் எவ்வளவு பெறப்போகிறோம், எவ்வளவு செலவு செய்துள்ளோம் உள்ளிட்டவை குறித்து கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக நம்முடைய அரசு எல்லாத்திட்டங்களையும் செயல்படுத்தும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உறுதுணையோடு புதுச்சேரி மாநிலத்தை சிறந்த மாநிலமாக கொண்டு வருவோம் என்றார்.
எம்எல்ஏக்கள் மக்களுடைய மனநிலைக்கு ஏற்பத்தான் இங்கு செயல்படுகின்றனர். ஆதலால் அரசு செயலர்கள் எல்லோரும் மக்களுடைய மனநிலையை அறிந்து விரைவாக செயலாற்ற வேண்டும். வங்கிகளில் ஹட்கோ, நபார்டு வங்கிகள் கடன் அளிக்க விரைந்து செயல்பட வேண்டும். கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பென்ஷன் ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும். தற்போதுள்ள 260 தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும். மத்திய அரசிடம் ரூ.2 ஆயிரம் கோடி நமக்கு அவசியம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் கடன் தொகை ரூ.10 ஆயிரம் கோடி அளவில் மிகவும் உயர்ந்துள்ளது. கடனை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியை மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் பேசினார்.