தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதியுடன் ரூ.1,763 கோடி செலவில் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது - அரசின் கவனம் மிகுதியாகத் தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத்திறனாளிகளாகும். அவர்களின் உரிமைகளைக் காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையை உறுதி செய்யவும் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை தற்போது ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளிகள் பயனடைகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுடன் 1,763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும். சமூகப் பதிவு அமைப்பு மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.