தலைநகர் டெல்லியில், கிரிப்டோகரன்சி முதலீடுகள் மூலம் 200% லாபம் பெற்று தருவதாக கூறி, 500 கோடி ரூபாய் வரை மோசடி நடத்தப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. அவர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களை கோவா சுற்றுலா, துபாய் சுற்றுலா மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பிளாக் செயின் குறித்து விதவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அவர், பொதுமக்களிடம் கூறிய அலுவலக முகவரி மற்றும் கூட்டுறவு வங்கி விவரங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்துள்ளது. அவர், பொதுமக்கள் தங்களின் முதலீடுகளை வலைத்தளம் மூலம் கிரிப்டோகரன்சிகளாக திருப்பி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார். ஆனால், அந்த வலைத்தளம் செயல்பாட்டில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இந்த கிரிப்டோ மோசடி சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.