அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. செவ்வாயன்று, ரூபாய் 85.2075 என்ற புதிய வரலாற்றுச் சாதனைக்கு சரிந்தது. இது திங்கள்கிழமை பதிவான 85.12 என்ற குறைந்தபட்ச மதிப்பை முறியடித்துள்ளது. அது மட்டுமின்றி ஆறாவது தொடர்ச்சியான நாளாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
உலகளாவிய அளவில் முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறுவது, நாட்டின் இறக்குமதி மதிப்பு அதிகரித்து இருப்பது மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் போன்ற பல காரணிகள் இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. நிபுணர்களின் கணிப்பின்படி, வரும் இரண்டு வாரங்களில் ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 85.50 என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க பத்திரங்களின் வட்டி விகிதம் 4.59% ஆக உயர்ந்துள்ளது மற்றும் டாலர் குறியீடு 108.2 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாயின் அதிகமான வீழ்ச்சியை தடுக்க முயற்சித்த போதிலும், குறிப்பிட்ட எந்த ஒரு மதிப்பையும் நிலை நிறுத்த முடியவில்லை.