ரஷ்ய நாட்டின் கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக, ரஷ்யா, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதம் முதல் குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் கூறியதாவது: "ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு பேரல் ஒன்றுக்கு 60 டாலர் விலை வரம்பை மேற்கத்திய நாடுகள் நிர்ணயம் செய்துள்ளன. இந்த விலை வரம்பை அமல்படுத்தும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்படும். நேரடியாக மட்டுமல்லாது மறைமுகமாக அமல்படுத்தும் நாடுகளுக்கும் இது பொருந்தும். மேலும், எங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேரல்கள் குறைக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது.














