ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நீதிமன்றம், அமேசான் நிறுவனத்திற்கு 65000 டாலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ரூபிள்கள் மதிப்பில் இது 4 மில்லியன் ஆகும். அமேசான் இணையதளத்தில், போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் தற்கொலை குறித்த தடை செய்யப்பட்ட தகவல்களை வெளியிட்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பொழுதில் இருந்து, ஆப்பிள், கூகுள், மெட்டா போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு, ரஷ்ய தரப்பில் இருந்து, தொடர்ச்சியாக அபராதங்களோ, தடைகளோ விதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இதனை, மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான தாக்குதல் என்று ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
அமேசான் நிறுவனத்தின் ஸ்ட்ரீமிங் தளமான டுவிச் (Twitch) தளத்திற்கும் தனியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தகவல்களை தளத்தில் இருந்து நீக்காததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஷ்யா, டுவிச் தளத்திற்கு 8 மில்லியன் ரூபில்கள் அபராதம் விதித்துள்ளது. ஏற்கனவே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் காணொளி மற்றும் நேர்காணலை டுவிச் தளம் ஒளிபரப்பு செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. போலியான தகவல்களை வெளியிடுவதாக தளத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த அபராதங்கள் குறித்து அமேசான் நிறுவனம் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.