பல மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி சேதமடைய செய்துள்ளன.
சமீபத்தில், கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறும் அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டது.
இதனால், உக்ரைன் வெற்றியை நோக்கி செல்கிறது. போர் முடிவுக்கு வரவுள்ளது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உற்சாகமுடன் கூறினார். ஆனால், இதற்கு மாறாக உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவர் கூறும்போது, ரஷ்யாவை சேர்ந்த 85 ஏவுகணைகள் எங்களது மின்சார உட்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலால், பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மின் இணைப்புகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு தாக்குதலில் இருந்தும், தப்பி மீண்டு வருவோம் என சூளுரைத்து உள்ளார். உக்ரைனின் மின்துறை மந்திரி ஹெர்மன் ஹாலுஸ்சென்கோ, ராணுவ மற்றும் தூதரக முயற்சிகள் தோல்வி அடைந்த சூழலில், ரஷ்யாவின் பழிவாங்கும் மற்றொரு பயங்கரவாத முயற்சி என குறிப்பிட்டு உள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, 9 மாத ரஷ்யா படையெடுப்பில் இல்லாத வகையில் மின்துறை கட்டமைப்புகள் மீது மிக பெரிய அளவில் நடந்த வெடிப்பு தாக்குதல் என கூறியுள்ளார். குளிர்காலத்தில் எங்களுடைய ஆற்றல் சாதனங்களின் மீது பெரும் சேதம் ஏற்படுத்த ரஷ்யா முயற்சிக்கிறது என அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.














