அமெரிக்க அதிபர் டிரம்ப் அணு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷியாவிற்கு அருகே நிலைநிறுத்த உத்தரவிட்டதையடுத்து, ரஷியா அதற்கு பதிலாக, அமெரிக்காவுடன் உள்ள அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
ரஷியாவின் முன்னாள் அதிபர் மெத்வதேவ் அணு ஆயுதம் குறித்த அதிர்ச்சிகரமான கருத்து வெளியிட்டதை அடுத்து, அதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷிய எல்லைக்கு அருகில் அனுப்ப உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பதிலடி அளிக்கும் வகையில், ரஷியாவும் தன் அணு ஆயுதத் தளவாடங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுடன் கொண்டிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ், நாங்கள் விதித்திருந்த சுய கட்டுப்பாடுகளை இனி பின்பற்ற மாட்டோம். குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கான அணு ஆயுதங்களை முழு தயாராக வைத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கக்கூடியதாகவும், உலக மக்களுக்கு புதிய அணு அச்சுறுத்தலாகவும் காணப்படுகிறது.














