ஐ-போன்கள் மற்றும் ஐ-பேடுகளை ரஷிய அரசாங்க ஊழியர்கள் இனி வேலைக்காக பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரிக்கிறது. உக்ரைன் போருக்கு பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. எனினும், வேறு நாடுகளிலிருந்து ரஷியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐ-போன்களை மக்கள் வாங்கி பயன்படுத்தினர்.
இந்நிலையில், அமெரிக்காவின் உளவு நடவடிக்கை காரணமாக ரஷியாவில் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைப்பான எஃப்.எஸ்.பி. இரண்டு மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தது. இதனையடுத்து ரஷியா அந்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் "ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே ஐ-போன்கள் மற்றும் ஐ-பேடுகளை ரஷிய அரசாங்க ஊழியர்கள் இனி வேலைக்காக பயன்படுத்தக் கூடாது.
தனிப்பட்ட தேவைகளுக்காக ஐ-போன்களைப் பயன்படுத்தலாம்" என தெரிவிக்கப்பட்டது.














