ரஷ்ய அதிபர் புதின் இந்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அவர் ஐந்தாவது முறையாக பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
உக்ரைன் போரில் சீனா ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது. போருக்கு பயன்படும் எந்திரங்கள், மின்னணு பொருட்கள் போன்றவற்றை சீனா ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. வெளியே நடுநிலை வகிப்பதாக கூறிய போதிலும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் போன்றவை விதிக்கும் பொருளாதாரம் தடைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் சீனாவுக்கு வருமாறு புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று அதிபர் புதின் நாளை சீனாவுக்கு செல்கிறார். அங்கு அவர் இரண்டு நாட்கள் தங்கி பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.