ஜப்பான், பூமிக்கு அருகில் உள்ள விண்கற்களை ஆய்வு செய்வதற்காக Hayabusa2 திட்டத்தில் பணியாற்றி வருகிறது. தற்போது, இந்த திட்ட ஆய்வுகளில், ரைகூ என்ற விண்கல்லில் உயிரி பொருட்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“கார்பன் பொருட்களால் ஆன ரைகூ விண்கல், கிட்டத்தட்ட 3000 அடி அகலமானதாகும். இந்த விண்கல்லின் இரு வேறு பாகங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில், Uracil உள்ளது தெரிய வந்துள்ளது. இது RNA மற்றும் DNA க்களின் முக்கிய பாகமாக அறியப்படுகிறது. மேலும், வைட்டமின் பி3 அல்லது Niacin உள்ளதும் தெரிய வந்துள்ளது. இது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய துணை புரியும் பொருளாகும். இதன்மூலம், விண்வெளியில், உயிர்கள் தோன்றுவதற்கான அமைப்பு மிகுதியாக உள்ளது தெரியவந்துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லாக அமைகிறது.” - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.