தென்கொரிய ராணுவம், புதன்கிழமை அன்று, விண்ணிலிருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் 3 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இவை, வடகொரியாவின் ஏவுகணைகளுக்கான பதிலடி என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் தென்கொரியாவின் வடக்கு எல்லைப் பகுதி கடலில் ஏவப்பட்டன. இது வடகொரியாவின் கிழக்கு எல்லைக்கு அருகில் உள்ள பகுதியாகும். வடகொரியா ஏவிய ஏவுகணைகளில் ஒன்று தென்கொரியாவின் நிலப்பகுதிக்கு மிக அருகில் வந்ததால், அதற்கான பதிலடியாக இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில், தென் கொரிய எல்லைக்கு மிக அருகில் வந்த ஏவுகணை இது என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் தேசிய தொலைக்காட்சியில் வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடப்பட்டது. அதன் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அந்நாட்டின் அதிபர் யூன் சூக் இயோல், ‘முன்னறிவிப்பில்லாத’ இந்த தாக்குதல் குறித்து, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் கடந்த சனிக்கிழமை ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 156 பேர் உயிரிழந்தனர். எனவே, தேசமே அதற்கான அஞ்சலி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த வேளையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதற்கு, பாதுகாப்பு கவுன்சில் தரப்பில் இருந்து, “வட கொரிய ஏவுகணை அசாதாரணமாக தென்கொரிய நிலப்பகுதிக்கு மிக அருகில் வந்துள்ளது. இதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, பதில் தாக்குதல் நடத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மிகப்பெரிய ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. ஒத்திகை நிறைவடைந்த சில மணி நேரங்களில், அதனை எதிர்க்கும் விதமாக, வடகொரியா மூன்று ஏவுகணைகளை கிழக்கு கடற்கரையில் ஏவியது. அதில் ஒன்று தென் கொரிய எல்லைக்கு மிக அருகில் வந்துள்ளது. அதற்கான பதில் தாக்குதலை தென்கொரிய ராணுவத்தினர் நடத்தி, “சியோல் எதிர்த்து நிற்க தயக்கம் காட்டாது” என்று தெரிவித்துள்ளனர்.














