சாம்சங் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து, கோ பிராண்டட் கிரெடிட் கார்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கிரெடிட் கார்டு, விசா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த கிரெடிட் கார்டுகள் மூலம், சாம்சங் தயாரிப்புகளைப் பெறுவதில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக அனைத்து சாம்சங் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு 10% கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சலுகைகளுக்கு அப்பாற்பட்டு இந்த சலுகை வழங்கப்படுவதால், இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன், தவணை முறையில் வாங்கப்படும் சாம்சங் தயாரிப்புகளுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம், ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், ஏசி போன்ற பல்வேறு மின்னணு சாதனங்களை விற்பனை செய்கிறது. அத்துடன், அதை சார்ந்த சேவைகளையும் வழங்குகிறது. தற்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதால், வாடிக்கையாளர்களுக்கு நிறைய பணம் சேமிப்பாகிறது. மேலும், குறைந்தபட்ச தொகை என்று எதுவும் வரைமுறை செய்யப்படாததால், சிறிய அளவிலான சேவைகளுக்கும் இந்த கார்டுகளைப் பயன்படுத்த முடியும். அத்துடன், சாம்சங் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆப்லைன் நிலையங்கள், கடைகள் மற்றும் ஆன்லைன் விற்பனையகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் இந்த கார்டுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
‘சிக்னேச்சர்’ மற்றும் ‘இன்ஃபைனெட்’ என்று இரண்டு விதமான கிரெடிட் கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிக்னேச்சர் கார்டுகளில் ஒரு வருடத்திற்கு 10000 ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும். மேலும், மாதத்திற்கு 2500 ரூபாய் கேஷ்பேக் பெற முடியும். அதுவே, இன்ஃபைனெட் கார்டுகளில், வருடத்திற்கு 20000 ரூபாய் வரையும், மாதத்திற்கு 5000 ரூபாய் வரையும் கேஷ்பேக் சலுகைகளைப் பெற முடியும். சிக்னேச்சர் கார்டை பெறுவதற்கு வருடத்திற்கு 500 ரூபாயும் இன்ஃபைனெட் கார்டை பெறுவதற்கு 5000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத் தொகை போக, கூடுதலாக வரித்தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார்டுகளை வாங்கும் போது, வாடிக்கையாளருக்கு வரவேற்பு சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. இது, இந்த கார்டின் மூலம் 3 பரிவர்த்தனைகள் முடிந்த பின்னர் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சிக்னேச்சர் கார்டுகளுக்கு 2500 புள்ளிகளும் இன்ஃபைனெட் கார்டுகளுக்கு 30,000 புள்ளிகளும் வரவேற்பு சலுகையாக வழங்கப்படும். இது முறையே 500 ரூபாய் மற்றும் 6000 ரூபாய் க்கு சமமாகும் என்று கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் இந்த கிரெடிட் கார்டுகளைப் பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சாம்சங் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இணைந்து, பிரபல இணைய வர்த்தகத் தளங்களுடன் கூட்டணியில், சலுகை கட்டண திட்டங்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.